ஆச்சி, தாத்தாவின் கைகளைப் பற்றிக்கொண்டே நடைபோட்ட சிறு வயது நினைவுகள் என் மனத்தில் குட்டி குட்டி இன்ஸ்டா ரீல்ஸ் போல நிழலாடிக்கொண்டே இருக்கின்றன. ஆண்டுதோறும் இரண்டு மாத கோடை விடுமுறையில் எண்ணற்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பது வழக்கம். கூடவே சிலபல த்ரில் சம்பவங்களும் உண்டு. ஒரு வகையில் அவ்விரண்டுமே நம்மை ரசிக்க வைக்கும். ஆச்சி, தாத்தா, மாமா, சித்தி என்று உறவுகளின் மூலம் ஏராளமான அனுபவப் பாடங்களை 80'ஸ் & 90'ஸ் கிட்ஸ் நிறைய நிறைய கற்றுக் கொண்டோம். அவர்கள் சொல்வதை எந்த எதிர்ப்புமின்றி கேட்டுக்கொண்டோம். அப்படித்தான் வாழ்க்கையின் எல்லா சுவைகளையும் ரசிக்கப் பழகினோம்.
ஃப்ளாஷ்பேக்!
ஒருமுறை கோடை விடுமுறைக்கு ஆச்சி என்னையும் தங்கையும் திருச்சியிலிருந்து அழைத்துச் சென்றார். அப்படியே மதுரைக்குச் சென்று தம்பியையும் அழைத்துக்கொண்டு தூத்துக்குடிக்குச் சென்றோம். பேரன் பேத்திகள் மட்டும் தனியாக ஒரு மாதம் ஆச்சி தாத்தாவோடு கழித்தோம். எங்கள் ஆச்சி தாத்தா இருவருமே ஜாலியாக இருப்பார்கள்... அதே நேரத்தில் அவசியமான கண்டிப்பும் உண்டு. அப்படி அவர்கள் கண்டிப்போடு நடந்துகொள்ளும்போது கொஞ்சம் கோபமும் நிறைய அழுகையும் வந்துவிடும். அவற்றையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் ‘அந்த ஒவ்வொரு திட்டும்தான் நம்மைத் தங்கமா ஆக்கிடுச்சு’ என்று தோன்றுகிறது.
நான் கோலம் போடும் அழகைக் கண்டு ரசிப்பார்கள் ஆச்சி. ஆனால், அதை முகத்தில் காட்டாமலே, ‘அடுத்த முறை வேற புது டிசைன் முயற்சி செய்ய வேண்டும்’ என்று கூறுவார்கள். அத்திப் பூத்தாற்போல என்றாவது ஒரு நாள் அவர்களிடமிருந்து பாராட்டுச் சொற்களைக் கேட்கும்போது நம் முகத்தில் புன்னகைப் பூக்கள் பூத்துக் குலுங்கும்!
ஆச்சி தாத்தா வீட்டில் எப்போதும் பக்கா மிலிட்டரி ரூல்ஸ்தான். காலை ஆறு மணிக்கு மேல் தூங்கக்கூடாது. என்னதான் போர்வையைத் தலையோடு இழுத்துப் போர்த்தித் தூங்கினாலும் வானொலியில் ஒலிக்கும் ‘வந்தே மாதரம்’ வா வா என்று எங்களை எழுப்பிவிடும். தூத்துக்குடியில் நாங்கள் இருந்த வீட்டில் தண்ணீருக்கு எப்போதும் கஷ்டம். அதிகாலையில் எழுந்து அடிகுழாய் பம்பில் கையை மாற்றி மாற்றி அடித்து தண்ணீர் எடுக்க வேண்டும். அல்லது கிணற்றில் இறைக்க வேண்டும். காலையில் ஆச்சியும் தாத்தாவும் வேக வேகமாக தொட்டிகளில், செப்பானைகளில் தண்ணீரைச் சேமித்து வைப்பார்கள். நாங்களும் எங்களால் முடிந்ததைச் செய்து உதவுவோம். பின் பூஜைக்கு தோட்டத்துப் பூக்களைச் சரம் தொடுத்துவிட்டு, ஆச்சிக்கு மதிய உணவிற்கு சிறு சிறு உதவிகளைச் செய்து கொடுப்போம். பிறகு தாத்தாவுடன் போஸ்ட் ஆஃபீஸ், மார்க்கெட், லைப்ரரி அல்லது ரேஷன் கடைக்கு ஒரு குட்டி ரவுண்ட் அடித்து விட்டு பக்கத்து காம்பவுண்டுக்கு விளையாட ஓடி விடுவோம். ஆச்சி எங்களை அழைக்கும் வரை நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்போம்.
ஒரு நாள் ஆச்சி ஜன்னலோரத்தில் வந்து, ‘விளையாடியது போதும் சீக்கிரம் வீட்டுக்கு வாருங்கள், எல்லோரும் சேர்ந்து மேட்னி ஷோ போகலாம்’ என்று சொன்னதும் ‘நெசமாவா ஆச்சி’ என்று நாலு குதி குதித்துவிட்டு டகடகவென கிளம்பித் தயாரானோம்.
வழக்கம்போல தாத்தா ‘எனக்கு வயதாகிவிட்டது... நீங்கள் எல்லோரும் ஆச்சியுடன் பத்திரமாகச் சென்று வாருங்கள்’ என்று பை சொல்லியாச்சு.
நாங்கள் வேகமாகக் கிளம்பி, வாசலில் தயாராக உட்கார்ந்திருந்தபோது எதிர்பாராத விருந்தாளி. அவர்களிடம் பேசி மதிய உணவு பரிமாறியதில் கொஞ்சம் நேரமாகிவிட்டதால் மேட்னி ஷோ ப்ளான் ஈவினிங் ஷோக்கு மாறிவிட்டது.
சித்திரை மாதம் என்பதால் வெயில் கொஞ்சம் குறைந்ததும் கிளம்பினோம். ‘மூணு பேரும் அன்னநடை போடாம கொஞ்சம் சீக்கிரம் நடக்கணும்’ என்று ஆச்சி சொன்னதும் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தோம்.
பாதி வழி நடந்துகொண்டிருக்கும் போது மேலூர் ஸ்டேஷனில் ரயில் கேட்டை மெதுவாகப் போட்டதும் ‘இப்பவா இந்த கேட்டை போடுவான்’ என்று ஆச்சிக்கு கொஞ்சம் பதற்றம். பத்து நிமிடங்கள் காத்திருந்த பின் மேலூர் ஸ்டேஷனை ஒட்டியுள்ள அரசமரத்தடியில் அழகாக அமர்ந்திருக்கும் குட்டி வரத விநாயகரை தரிசனம் செய்து விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.
ஒரு வழியாக சார்லஸ் தியேட்டருக்குச் சென்றோம். கவுண்டரில் நிற்கும்போதே டிக்கெட்டுகள் முழுவதும் காலியாகிவிட்டன. வெளியே வந்து கொஞ்ச நேரம் நின்ற பிறகு மெல்ல வீட்டுக்குக் கிளம்பத் தயாரானோம்.
‘வீட்டுக்கு இப்ப என்ன அவசரம். வருஷத்துல இரண்டு மூணு வாட்டி வறீங்க, நானும் அப்படியே உங்ககூடயே ஊர்சுத்தினா ஜாலியா இருக்கும். வாங்க அப்படியே நாம எல்லோரும் வேற எங்காவது போலாம்’ என்று ஆச்சி சொன்னதும், தம்பி ஆச்சியிடம், ‘பீச் போவோமா’ என்றான். ‘ஆத்தாடி என்னால் அவ்வளவு தூரம் எல்லாம் உங்களைத் தனியாகக் கூட்ட்டுப் போக முடியாதுபா’ என்றார். அப்படியே கடை வீதியில் சுற்றிவிட்டு சிவன் கோவில் போகலாம் என்று முடிவு செய்தோம். பாதி மனதோடு நடக்க ஆரம்பித்தோம்.
வழியில் தூத்துக்குடி ஃபேமஸ் சேர்மவிலாஸ் ஜீஸ் கடையில் பழரசம் குடித்துவிட்டு நடையைத் தொடர்ந்தோம். வீதிகளில் கடைகளை பராக் பார்த்துக்கொண்டே நடப்பது ஒரு தனி சுகமே. பின் கோவிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது பொழுது சாய்ந்து இருட்ட ஆரம்பித்துவிட்டது.
நாங்கள் ஆச்சியிடம் ‘படத்துக்கும் போகல்ல, பீச்சுக்கும் போகல்ல... மதியானம் சீக்கிரமே சாப்பிட்டாச்சு அதனால்ல ஹோட்டலுக்கு போலாமா’ என்று மெல்லக் கேட்டோம். ஆச்சி அதற்கு ‘ஹோட்டல் சாப்பாடா? இன்னைக்கு எதுக்கு ஹோட்டல் சாப்பாடு? வீட்டுல்ல எல்லாம் இருக்கும்போது எதற்கு ஹோட்டல்? அனாவசியமாக ஹோட்டலில் சாப்பிடக்கூடாது. அதெல்லாம் இன்னொரு நாள் சாப்பிடலாம்’ என்று கூறினார்கள்.
அப்படியே மீண்டும் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தோம். போகும் வழியில் குருணை அரிசி வாங்கிக்கொண்டு சென்றோம்.
வீட்டுக்குச் சென்றதும் ஆச்சி ஒரு நிமிடம் கூட உட்காரவில்லை. நேரே அடுப்பங்கரைக்குச் சென்று அடுப்பில் நீத்தண்ணீரை கொதிக்க வைத்தார்கள். எங்களுக்கு ஏதும் புரியவில்லை. ‘தோட்டத்துக்குப் போய் கறிவேப்பிலை மட்டும் பறித்து வாருங்கள்.... நிமிடத்தில் சாதம் ரெடி செய்திடுவேன்’ என்றார்கள் ஆச்சி.
‘ஆச்சி 7 மணியை தாண்டிவிட்டதே பறிக்கலாமா’ என்று கேட்டோம். ‘இன்னைக்கு ஒரு நாள் நோ ரூல்ஸ்’ என்றார்கள். வேகமாக ஓடிப் போய் பறித்து வந்தோம். நீத்தண்ணீர் கொதி வந்ததும் இரண்டு கை கறிவேப்பிலையை உருவிப் போட்டார்கள். அதைப் போட்டதும் அப்படி ஒரு மணம். பின் குருணை அரிசியை போட்டு இருபதே நிமிடத்தில் தயார் செய்து முடித்தார்கள்.
தொட்டுக்கொள்ள அம்மியில் அரைத்த கறிவேப்பிலை தேங்காய்த்துவையல். ஆச்சி அம்மியில் அரைப்பதைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். முதலில் கல் உப்பையும் புளியையும் லேசாக நொறுக்கி மிளகாய்வற்றல், தேங்காய் கறிவேப்பிலையை வைத்து அரைக்கும் போது வீடெல்லாம் நிறைந்தது அதன் மணம்.
பின் வாசலில் எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து சுடச்சுட நீத்தண்ணி சாதத்தை கறிவேப்பிலை துவையல் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய் வைத்து சாப்பிட்டோம். அன்றுதான் முதன்முதலில் நீத்தண்ணி சாதத்தை ருசித்தோம். அன்று பசியில் சுவையான நீத்தண்ணி சாதத்தை சாப்பிடச் சாப்பிடத் திகட்டவில்லை
ஏன் ஆச்சி ‘எங்க அம்மால்லாம் இந்தச் சாதத்தை செய்ததில்லை’ என்று கேட்டோம். ஆச்சி அதற்கு, ‘இப்போது யாரும் சாதத்தை வடித்துப் பொங்குவதில்லை. எல்லோரும் குக்கருக்கு மாறியதால் இந்த நீத்தண்ணிர் சாதம் மெல்ல மறைந்து விட்டது’ என்றார்கள்.
சாப்பிட்டு முடிந்ததும் ஆச்சியிடம், "இனி அடிக்கடி செய்து தாருங்கள்" என்று கேட்டோம்.
இதோ... ஆச்சி கற்றுத்தந்த நீராகார சாதம் ரெசிபியை விருந்தோம்பல் வீடியோவில் பார்ப்போம்.
சாப்பிடும் போது தாத்தா எங்களிடம், ‘படத்துக்கு போன பிள்ளைங்க அதைப்பற்றி யாருமே எதுவும் சொல்லலையே’ என்று கேட்டவுடன் ஆச்சி, ‘இப்பவாது கேட்கணும்னு தோணுச்சே’ என்றார்கள். ‘24 மணி நேரமும் செய்தித்தாளையும் புத்தகத்தையும் மாத்தி மாத்தி படிச்சா வீட்டுல்ல என்ன நடக்குதுன்னே தெரியாது உங்க தாத்தாவுக்கு...’ என்பது அதன் தொடர்ச்சி.
இப்படியே தினம் தினம் கலைடாஸ்கோப்பைப் போல பல பல வண்ணக் கலவையாக விடுமுறை நாட்கள் எங்களைப் பரவசப்படுத்தின. ஊருக்குக் கிளம்பும்போது ஆச்சியும் தாத்தாவும் எங்களது நெற்றி நிறைய திருநீறு பூசி வாழ்த்தி வழியனுப்புவார்கள்.
அன்று படம் பார்க்க டிக்கெட் கிடைக்காமல் போனது, பீச் மற்றும் ஹோட்டலுக்கு ஆச்சி ‘நோ’ சொன்னது... இவையெல்லாம் பெரிய ஏமாற்றமாக இல்லை. ஒவ்வோர் அனுபவமும் நாம் நம்மைப் பண்படுத்திக்கொள்ளவே உதவியாக இருந்தது.
Comments
Post a Comment